வீணான மே.இந்திய தீவுகள் போராட்டம்.,,! இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்புண்டா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் 4 - வது அணி எது என்பதில் சஸ்பென்ஸ் நீண்டு கொண்டே போகிறது. நேற்று மே.இந்திய தீவுகளை வென்ற இலங்கை அணி, தமக்கும் அரையிறுதி வாய்ப்பு கிட்டாதா? என்ற ஏக்கத்தில் உள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இல்லாத அளவுக்கு இந்தத் தொடரில் தான் அதிரடி திருப்பங்களுடன் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்கின்றன. லீக் போட்டிகள் முடிவுறும் தருவாயில் இருந்தாலும் இதுவரை அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா மட்டுமே உறுதி செய்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் வாய்ப்பை பிரகாசமாக்கி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டன என்றே கூறலாம்.
அரையிறுதிக்குள் நுழைவது யார்? என்பதில் தான் தினம் தினம் புதிய க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறுகின்றன. இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே தான் இன்னமும் அரையிறுதி சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தான் மிகப் பெரும் இழுபறி உள்ளது என்றாலும், இலங்கை, வங்கதேசம் அணிகளும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து வாய்ப்பு கிடைத்து விடாதா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.
ஏனெனில் இலங்கை அணி நேற்று மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இன்னும் வாய்ப்பில் நீடிக்கிறது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா பெர்ணாண்டோ (104) சதமடிக்க, குசல் பெரேரா(64) அரைசதம் விளாச, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களைக் குவித்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார இலக்கை மே.இந்திய தீவுகள் அணியும் எட்டிவிட வேண்டும் என விறுவிறுப்பு காட்டியது. கெய்ல் (35) ஹெட்மயர் (29) கேப்டன் ஹோல்டர் (26) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். அடுத்து அபார ஆட்டம் ஆடிய பேபியன் ஆலம் (51), நிக்கோலஸ் பூரன் (118) ஆகியோர் மே.இந்திய தீவுகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினர். ஆனால் கடைசிக் கட்டத்தில் இலங்கையின் மலிங்கா வேகத்தில் மிரட்ட ரன் சேர்க்க முடியாமல் திணறிய மே.இந்திய தீவுகள் 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் மே.இந்தியதீவு வீரர்களின் போராட்டம் வீணாக, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் 6- வது இடத்தில் இருக்கும் இலங்கை, கடைசிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஒரு வேளை பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்கள் கடைசிப் போட்டியில் மோசமாகத் தோற்று, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபார வித்தியாசத்தில் இலங்கை வென்றால் மட்டுமே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த அதிசயங்கள் நிகழுமா? என்ற ஏக்கத்தில் இப்போது இலங்கை உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களை துரத்தும் 'காயம்' பிரச்னை..! விஜய் சங்கரும் விலகல்