இந்தியாவை துரத்தும் காயம்... ஷாக் கொடுக்குமா வங்கதேசம்?
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசத்துடன் இந்தியா மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் இந்தியா காலடி வைத்து விடும். அதே வேளையில் இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் வங்கதேசம் நீடிக்க முடியும். இத்தகைய சூழலில் இன்றைய போட்டியில், இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவால் விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காயம் பிரச்னையால் அடுத்தடுத்து வீரர்கள் விலகுவது தான் இந்திய அணிக்கு சிக்கலாகியுள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடித்தாலும், அரையிறுதி வாய்ப்பை இன்னும் இறுதி செய்யவில்லை. இந்நிலையில் இன்று பர்மிங்ஹாமில் நடைபெறும் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் அரையிறுதி உறுதியாகி, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தை இந்தியா எட்டிவிடும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மாவும், கோஹ்லியும் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை தொடர்கின்றனர். காயத்தால் வெளியேறிய ஷிகர் தவானுக்குப் பதிலாக இடம் பிடித்த லோகேஷ் ராகுல் தொடர்ந்து சொதப்புகிறார். அவரும் காயம் பட்டுள்ளதால் ஓபனிங் இறங்குவது சந்தேகம். மயங்க் அகர்வாலை இறக்கி சோதித்துப் பார்க்க கோஹ்லி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தோனி, கேதார் ஆகியோரின் ஆமை வேக ஆட்டம் பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனால் இருவரும் அதிரடிக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பாண்ட்யா அதிரடியாக ஆடி விரைவாக ரன் சேர்த்தாலும் விரைவில் அவுட்டாகி வருகிறார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய ரிஷப் பாண்டும் அதிரடி காட்டத் தவறிவிட்டார். இன்று அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வீரர்களை துரத்தும் 'காயம்' பிரச்னை..! விஜய் சங்கரும் விலகல்பந்து வீச்சில் ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்டினாலும், சுழலில் குல்தீப்பும், சகாலும் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாக உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கேதார் ஜாதவுக்கு பதிலாக ஜடேஜாவும், சகாலுக்குப் பதிலாக, காயத்திலிருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் மீண்டும் அணியில் இணைவார் என்று தெரிகிறது.
இந்தியாவை இன்று எதிர்கொள்ளும் வங்கதேசத்தையும் அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது. அந்த அணியின் ஆல் ரவுண்டராக சாகிப் அல் ஹசன் மிரட்டல் பார்மில் உள்ளார். முஸ்பிகுர், தமிம் இக்பால் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளதால் இன்றும் ரன் வேட்டையைத் தொடர்வார்கள் என்று நம்பலாம்.அந்த அணியில் பந்து வீச்சு தான் பலவீனமாக உள்ளது என்றாலும், வெற்றிக்கு போராடும் குணம் வங்கதேச வீரர்களிடம் அதிகமாகவே உள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம், 3-ல் வெற்றி, 3-ல் தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையில் 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்தாலும், அந்த அணியும் அரையிறுதி ரேசில் இதுவரை உள்ளது. அதை தக்க வைக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேசம் இந்தியாவுக்கு சவால் விடும் என்பது நிச்சயம். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
வங்கதேசம் அரையிறுதியில் நுழைய வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும் தெரியுமா? அதற்கு இன்றைய இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வங்கதேசம் வெல்ல வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டும்.இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் வங்கதேசம் அரையிறுதியில் நுழைய முடியும்.