வேலுமணி தொல்லையால்தான் இசக்கிசுப்பையா கட்சி மாறினாரா? டி.டி.வி. தினகரன் அளித்த விளக்கம்
இசக்கி சுப்பையா ஏன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு செல்கிறார் என்பதற்கு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஒன்றில் கூட அ.ம.மு.க. வெற்றி பெறவில்லை. இந்த தோல்விக்குப் பிறகு டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து முக்கிய தளகர்த்தாக்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். தங்கத்தமிழ்ச் செல்வன், தி.மு.க.வுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து, செய்திதொடர்பாளர் சசிரேகா, அதிமுகவுக்கு சென்றார். அடுத்து முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் அ.தி.மு.க.வுக்கு தாவுகிறார்.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு: நிர்வாகிகள் சொந்த காரணங்களால், சுயநலத்தால் வேறு கட்சிக்கு செல்கிறார்கள். யாரையாவது தடுத்து நிறுத்தி என்ன ஆகப் போகிறது. கட்சியில் இருப்பது என்றால் விருப்பப்பட்டுதான் இருக்க முடியும். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.இசக்கி சுப்பையாவை முன்னாடி தெரியுமா? 48 நாள் அமைச்சராக இருந்தவர். எங்க கட்சியில் அவரை பேரவை துணை செயலாளராக போட்டதால், எல்லோருக்கும் தெரிகிறது. அவர் போகப் போகிறார் என்றதும் நீங்கள் கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறார். அதனால், இதை எல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
மீடியாவில் வேண்டுமானால், தினகரன் கட்சிக்கு சரிவு என்று போட்டு கொள்ளுங்கள். வருங்காலத்தில் அது உண்மையா, பொய்யா என்பதை எங்கள் தொண்டர்களும், மற்றவர்களும் காட்டுவார்கள்.
இசக்கி சுப்பையா யாரை குறை சொல்லுகிறாரோ, அந்த மண்டலப் பொறுப்பாளர்(மாணிக்க ராஜா) தான் அவருக்கு மாநில துணை செயலாளர் பதவி அளிக்கச் சொன்னார். நாம் கொடுத்தோம். இப்ப இல்லே. 2009ல் தளவாய்சுந்தரம் பேரவைச் செயலாளராக இருந்த போது நான் சொல்லித்தான் முதன்முதலில் இசக்கிக்கு பதவி கொடுக்கப்பட்டது. எங்களால் முதல்வராக்கப்பட்ட பழனிச்சாமி, பன்னீர்செல்வம் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்தா போய் விட்டோம்? எங்கள் இயக்கம் இன்னும் வலுவாக மாறும்.
தினகரன் ஆணவத்தில் பேசுகிறார் என்கிறார்கள். அப்படியல்ல, நான் யாரையும் பிடித்து வைக்க முடியாது. இசக்கி சுப்பையா ஒரு பெரிய கான்ட்ராக்டர். பாதாளச் சாக்கடை கான்ராக்டர். என் கிட்ட நிறைய தடவை சொல்லியிருக்கிறார். ‘‘எனக்கு அரசாங்கத்தில் இருந்து 70 கோடி வர வேண்டியிருக்கிறது. அமைச்சர் வேலுமணி எனக்கு நிறைய பிரச்னை கொடுக்கிறார்’’ என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால், ஒரு அளவுக்கு மேல அதையெல்லாம் தாங்க முடியாமல் அவர் அங்கே போயிருக்கலாம். அதற்காக இதெல்லாம் எனக்கு பின்னடைவு என்று பார்க்க வேண்டியதில்லை. தொண்டர்கள்தான் பலம்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
தினகரன் கூடாரத்தில் மேலும் ஒரு முக்கிய விக்கெட் காலி.? இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைகிறார்