அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பாஜக எம்.எல்.ஏ- பிரதமர் மோடி கடும் கோபம்
மத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட் பால் பாஜக எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மற்றும் தாக்குதலின் போது உடனிருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க தம் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய வர்கியா. இவருடைய தந்தை கைலாஷ் விஜய் வர்கியா, பாஜக தேசியச் செயலாளராக உள்ளார். கடந்த ஒரு வாரம் முன்பு, இந்தூரில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் போது, பாஜக ஆதரவாளர் ஒருவரின் கட்டடத்தையும் இடிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த பாஜக எம்எல்ஏ ஆகாஷ், மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட் கொண்டு சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இதனால் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்து சிறைக்கும் அனுப்பினர் . ஓரிரு நாளிலேயே ஜாமீனில் வெளிவந்த எம்எல்ஏவை, அவருடைய ஆதரவாளர்கள் , தடபுடலாக வரவேற்று, ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஒரு அரசு அதிகாரியை அடித்த குற்றத்திற்காக சிறை சென்று வந்த எம்எல்ஏவுக்கு இந்த தடபுடல் வரவேற்பு கொடுத்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வெளியில் வந்த பாஜக எம்எல்ஏவும், தான் அதிகாரியை தாக்கியதை நியாயப்படுத்தி இருந்ததும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிகாரியை பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆகாஷின் தந்தையும், பாஜக தேசியச் செயலாளருமான கைலாஷ் விஜய் வர்கியாவும் பங்கேற்றிருந்தார். அப்போது ம.பி. சம்பவம் குறித்து பெயர் குறிப்பிடாமல் தெரிவித்த பிரதமர் மோடி, அதிகாரி ஒருவரை பாஜக எம்பில் ஏ கிரிக்கெட் பேட்டால் தாக்கும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகாரிகளை தாக்குவதற்காகவா எம்.பி, எம்.எல்.ஏ.க்களாக மக்கள் தேர்வு செய்தனர் என்ற மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீதும் உடனிருந்த பாஜக நிர்வாகிகள், மற்றும் சிறையிலிருந்து வெளிவந்த போது தடபுடல் வரவேற்பு கொடுத்தவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுங்கள். என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உத்தரவும் போட்டாராம்.
ரூ 3000 கோடியில் அமைக்கப்பட்ட படேல் சிலையில் மழைக்கசிவா? - பரபரப்பு தகவல்கள்