சென்னை: போலி நகைகளை கொடுத்து பணம் கேட்ட 2 பெண்கள் கைது

சென்னை அபிராமபுரம் ராமன் சாலையில், இரண்டு பெண்கள் தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நாங்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். அவசர தேவையாக பணம் தேவைப்ப்படுகிறது என அங்கு வருவோர் போவோரிடம் அடகு கடை எங்கு இருக்கிறது எனக் கேட்டதுடன் நகைகளை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அடகு கடை இல்லை என்றாலும் பரவாயில்லை நகைகளை நீங்கள் வைத்துக்கொண்டு கணிசமான தொகை கொடுத்தால் சில தினங்களில் மீட்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த இரண்டு பெண்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் நந்தினி என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கொலுசுகள், செயின்கள் ஆகியவை போலி என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூபாய் பத்தாயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றுபவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார் இவர்கள் கொண்டு வந்த பணம் போலி நகைகள் கொடுத்து ஏமாற்றப்பட்டதா? வேறு ஏதேனும் சம்பவங்களில் இவர்கள் ஏமாற்றி உள்ளனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- தமிழ்

More News >>