புகார்களில் சிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

தேனி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்தவர் சிவசாமி.இவர் மீது மின்வாரிய பணி தொடர்பாக மகேந்திரன் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2015-ல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு காரணமாக சிவசாமி 24.2.2015-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி சிவசாமி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், மின்வாரிய தலைமை பொறியாளருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,மின்வாரியத்தில் லஞ்சப்புகாரில் சிக்கும் ஊழியர்கள் துறைரீதியான விசாரணையை சந்திக்கின்றனர். பல ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மின்வாரியத்தில் மி்ன் இணைப்பு வழங்குவது, பழுது நீக்குவது, மின் சாதனங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊழியர்கள் பணம் கேட்கின்றனர்.

மின்வாரிய ஊழியர்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக அணுக வேண்டும். ஆனால் தீவிர குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊழியர்களில் சிலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்.

இதனால் மி்ன்வாரியத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கும் ஊழியர்களில் சிலர் மீது மட்டும் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதும், சிலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் போன்ற பாரபட்சமான நடவடிக்கையை கடைபிடிப்பது ஏன்? என்பது தொடர்பாக மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கடும் குற்றங்களில் தொடர்புடைய மின்வாரிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மின்வாரிய தலைமை பொறியாளர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

More News >>