பிரதமர் மோடி மீது சாமி கடும் அதிருப்தி
அமைச்சர் பதவியும் தராமல், தனது கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி மீது சுப்பிரமணிய சாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
பா.ஜ.க. தொடங்கும் முன்பு, ஜனசங்கம், ஜனதா கட்சி என்றிருந்த காலத்திலேயே அவற்றில் இருந்தவர் சுப்பிரமணிய சாமி. ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அவர், 2013ல் பா.ஜ.க.வில் சேரும் வரை அந்த கட்சியின் தலைவராக இருந்தார். அவர் எந்த பதவியிலும் இல்லாத காலங்களி்ல கூட, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர். காரணம், இந்தியாவில் எந்த தலைவரையும் நூறு சதவீத அக்மார்க் நேர்மையானவர் என்று சொல்லி விட முடியாது.
ஒவ்வொருவரின் ஊழல்கள் குறித்தும் துருவி,துருவி ஆராய்ந்து கைநுனியில் ஆவணங்களுடன் தகவல்களை சேகரித்து வைப்பவர் சாமி. அதனால் அவரை யாரும் பகைத்து கொள்ள மாட்டார்கள். கடந்த 1991-95ம் ஆண்டில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிலாளர் நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பதவியை சாமிக்கு அவர் வழங்கினார். அது மத்திய கேபினட் அமைச்சர் பதவிக்கு ஒப்பானது.
அதன்பின்பு, 1999ம் ஆண்டில் தன்னை அலட்சியப்படுத்திய வாஜ்பாய் அரசை ஒரு தேனீர் விருந்து கொடுத்து, ஜெயலலிதாவின் ஆதரவை வாபஸ் பெற வைத்து, கவிழ்த்தவர் என்ற பெயரும் சாமிக்கு உண்டு. இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, சுப்பிரமணிய சாமிக்கு எந்த பதவியும் தராவிட்டாலும் அவரை தனது நெருங்கிய நண்பராக வைத்து கொண்டார். எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கும் வகையில் சாமியை நடத்தினார். இதனால், சாமியும் பதிலுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை போட்டு அவர்களை நெருக்கடியில் வைத்திருந்தார். மேலும், 2016ல் ராஜ்சபாவுக்கு சாமியை நியமன உறுப்பினராக அனுப்பினார் பிரதமர் மோடி.
ஆனாலும், மத்திய நிதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் பதவிகள் மீது சுப்பிரமணியசாமிக்கு ஒரு கண் இருந்தது. ஏற்கனவே 1990ல் சந்திரசேகர் ஆட்சியி்ல் வர்த்தக அமைச்சராக சாமி இருந்துள்ளார். கடந்த 2014 முதல் 2019 வரை நிதியமைச்சர் ஜெட்லியின் செயல்பாடுகளை சாமி கடுமையாக விமர்சித்தார். அவரால்தான் பல காங்கிரஸ் தலைவர்கள் காப்பாற்றப்படுவதாவும், ஜெட்லியால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள மோடி, தனக்கு நிதியமைச்சர் பதவி தருவார் என்று சாமி எதிர்பார்த்தார். ஆனால், மத்திய அமைச்சரவையில் சாமியை வைத்து கொள்ளவே விரும்பவில்லை என்பது தெரிந்து விட்டது. அவருக்கு நிதியமைச்சர் பதவி தராதது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஏற்கனவே அதிருப்தியடைந்த சாமி, கடந்த 31ம் தேதியன்று, போட்ட பதில் ட்வீட்டில், ‘‘இது போன்ற மறுப்புகளை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். நான் கீதையை நம்பி கடைபிடிப்பதால், இந்த மறுப்புகள் எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனது கடந்த கால அனுபவங்களின்படி, இந்த ஏமாற்றங்கள் பின்னாளில் இதை விட சிறந்ததை தரும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர், ஒரு மாதம் ஓடியும் சாமியை மோடி கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது சாமி கடும் அதிருப்தியில் உள்ளார். இதை கடந்த ஜூன் 20ம் தேதி ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘‘சீனாவின் பிரபலமான சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பரில் என்னை அறிவார்ந்தோர் சபையில், ‘‘சீனாவின் பொருளாதாரம்- கடந்த 70 ஆண்டுகளின் ஆய்வு’’ என்ற தலைப்பில் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது. நமோ(நரேந்திர மோடி) என் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே ஆர்வமில்லாமல் இருப்பதால், நான் சீனாவுக்கு செல்வதுதான் சிறந்தது போலும்...’’ என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால், விரைவில் சாமிக்கு நல்ல பதவியை தருவதற்கு பிரதமர் மோடி முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, மோடி-அமித்ஷா அணி, சாமியை தொடர்ந்து கண்டு கொள்ளாவிட்டால், அவர் எப்படி மாறுவார் என்பதை நாமே யூகித்து கொள்ளலாம். அந்த பரபரப்பான காலம் வருமா?
மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு