30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தேர்தல் 64 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்டனம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் ஒரு அங்கமாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ் மற்றும் கார்ட்டூன்கள், கட்டுரைகள் வெளியாகின. ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எதிராக இன்னொரு தேர்தல் ஆணையர் லவாசா நேரடியாக குற்றம்சாட்டினார். ஆனாலும், சுனில் அரோரா எந்த வகையிலும் அலட்டிக் கொள்ளவே இல்லை.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க. ஏதோ முறைகேடு செய்கிறது என்று கருதி, 21 முக்கிய எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தன. அதாவது, 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரின. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன்பின், அமித்ஷா சொன்னது போல் பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 64 பேர் தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் மிக மோசமான தேர்தல் இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல்தான். தேர்தல் ஆணையத்தை குறை சொல்லக் கூடாது என்று நினைக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர்களே வேறு வழியின்றி பல முறைகேடுகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், ‘‘ராணுவம் குறித்து பிரச்சாரத்தி்ல் பேசக் கூடாது என்று விதிமுறை இருந்தும், புலவாமா, பாலகோட் தாக்குதல்கள் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.

பா.ஜ.க.வினரின் வெறுப்பூட்டும் பேச்சுகள், மதரீதியான பேச்சுகள் எதிலும் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோஷினை சஸ்பெண்ட் செய்தது தவறான முன்னுதாரணம்’’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

இந்த கண்டனக் கடிதத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் 80க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால், எதுவும் ஆகி விடப் போவதில்லை. ஆனால், இந்திய வரலாற்றில் இவை இடம் பெறும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள் வரலாற்றில் இடம்பெறும் என்பதையும் மறுக்க முடியாது.

ராஜ்யசபா எம்.பி. தேர்தல்... நாளை வேட்பு மனுதாக்கல்... அதிமுக, திமுகவில் அதிர்ஷ்டம் யாருக்கு?
More News >>