ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது சட்டப்பேரவையில் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கையை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும், எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி தராது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிந்து விடுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கும் என்று கூறி, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்ற பிரச்னையை எழுப்பி, சட்டசபையில் திமுக சார்பில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கையைப் பாதிக்கும் வகையிலான எந்த திட்டத்திற்கும், எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது. மத்திய அரசு அனுமதித்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அ.தி.மு.க. அரசுதான் ரத்து செய்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.