கிரண்பேடி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே மாநகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் வெள்ளத்தில் முழ்கியது. இதற்கு என்ன காரணம்? மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம்... இத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும்கூட காரணமாக உள்ளது’’ என்று கூறியிருந்தார்.

தமிழக மக்களைப் பற்றி கேவலமாக எப்படி இன்னொரு மாநில கவர்னர் பேசலாம் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையை எழுப்பி, கிரண்பேடியின் விமர்சனம் குறி்த்து பேசினார். அதை சபாநாயகர் தனபால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், மக்களவையில் இன்று இதே பிரச்னையை தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினர். கிரண்பேடியின் விமர்சனம் குறித்து டி.ஆர்.பாலு குறிப்பிட்டு பேசுவதற்கு அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி தர மறுத்தார். அவரை பேச அனுமதிக்க வேண்டுமென்று தி.மு.க. உறுப்பினர்கள் பலரும் எழுந்து கோஷமிட்டனர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து, ‘‘இது போன்ற விஷயங்களை சிறப்பு தீர்மானமாக கொடுத்தால், அதை விவாதிப்பது பற்றி சபாநாயகர் பரிசீலிப்பார்’’ என்று தெரிவித்தார். இந்த பிரச்னையால் சபையில் சில வினாடிகள் அமளி நிலவியது.

தண்ணீர் பிரச்னை; சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
More News >>