உலகக் கோப்பை வாய்ப்பு தராத கோபம்... ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடு..! ஐஸ்லாந்தில் செட்டிலாகிறார்
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தியடைந்துள்ள அம்பதி ராயுடு,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ள அம்பதி ராயுடு, அந்த நாட்டுக்காக விளையாடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அம்பதி ராயுடு, இந்திய அணியில் அதிரடி காட்டக் கூடியவர். 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியில் இடம் பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்பத்தியிருந்தார்.
உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் காயம்பட்ட போது கூட தமக்கு அழைப்பு வரும் என்றே எதிர்பார்த்தார். அப்படியும் கிடைக்கவில்லை.
இது போன்று இந்தத் தொடரில் விளையாட மூன்று முறை வாய்ப்பு இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று விரக்தியில்,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு இன்று அறிவித்து விட்டார்..
அம்பதி ராயுடுவின் இந்தத் திடீர் முடிவுக்கு பின்னணியில் ஒரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஐஸ்லாந்து நாட்டின் நிரந்தர குடிமகனாகும் உரிமையை ராயுடு பெற்றுள்ளாராம்.இந்தச் செய்தி நேற்று தான் வெளியில் கசிந்தது. அதுமட்டுமல்லாமல், நிரந்தர குடிமகன் உரிமையை வழங்கியதுடன், தங்களது நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட முன்வர வேண்டும் என்று ஐஸ்லாந்து நாடு அழைப்பும் விடுத்திருந்தது. இது குறித்து தங்களது நாட்டின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ராயுடுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தியும் வெளியாகியிருந்தது.
இதனால் ஐஸ்லாந்தில் செட்டிலாகும் திட்டத்துடனேயே அம்பதி ராயுடு திடீரென தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களை துரத்தும் 'காயம்' பிரச்னை..! விஜய் சங்கரும் விலகல்