சரக்கு பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்..! மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்
இஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் சில தங்களின் தயாரிப்பு பொருட்களில் இந்து கடவுள்கள் மற்றும் இந்திய தலைவர்களின் படங்களை ஏடாகூடமாக அச்சிட்டு, சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது.காலணிகளில் பிள்ளையார் படத்தை அச்சிடுவது, டி சர்ட்களில் அது போல இந்து மத கடவுள்கள் படத்தை அச்சிட்டு அவமதிப்பதும் பின்னர் எதிர்ப்பு கிளம்பியதும் பின் வாங்குவதும் சகஜமாகி விட்டது.
அது போன்று இப்போது இஸ்ரேல் நாட்டில் மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரும் தலைவர்களை கவுரவிப்பதாக நினைத்து நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை அவமதிப்பது போல் நடந்துள்ளது சர்ச்சையாகி விட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி மது பாட்டிலில் அந்நாட்டு தலைவர்கள் பலரின் படத்துடன் மகாத்மா காந்தியின் படத்தையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. கலக்கலான டீசர்ட், கலர்புல் கூலிங் கிளாஸ் என மகாத்மாவின் புகைப்படம் வித்தியாசமான தோற்றத்தில் பீர்பாட்டிலில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நமது நாட்டின் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கவலை தெரிவித்து பிரச்னை எழுப்பினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இஸ்ரேல் அரசைத் தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள், இந்தப் பிரச்னையை அந்நாட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையிட்டனர். இதையடுத்து, மல்கா பீர் நிறுவனம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மிகப் பெரும் தலைவர்களை கவுரவப்படுத்தும் எண்ணத்தில் தான் புகைப்படங்களை அச்சிட்டதாகவும், காந்தியின் படத்தை அச்சிட்டதில் வேறு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும், இந்தத் தவறுக்காகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும் இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக சம்பந்தப்பட்ட மதுபான மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார்.
மேலும் மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சர்ச்சை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.