இந்திரா காந்திக்கு பின் பெரிதும் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா - சொந்த கட்சியை எதிர்த்த விஜயதாரணி

இந்திரா காந்திக்கு பிறகு தாம் பெரிதும் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா என்று விஜயதாரணி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் இன்று திங்கட்கிழமை [பிப்ரவரி 12ஆம் தேதி] முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென அறிவித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தைத் திறக்கக் கூடாது என்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி, சட்டப்பேரவையில் இன்று காலை ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி ஆதரவு தெரிவித்துள்ளது கட்சிக்குள் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விஜயதாரணியிடம் கேள்வி எழுப்பியபோது, “தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு ஆதரவு தருகிறேன். கட்சி முடிவின் அடிப்படையில் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் பெண் தலைவர் என்ற முறையில் அவரை மதிப்பதால் படத் திறப்பை நான் ஆதரிக்கிறேன்.

இந்திரா காந்திக்கு பிறகு தாம் பெரிதும் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா. பெண்கள் இந்த சமுதாயத்தில் சாதாரண பதவிக்கு கூட வரமுடியாத நிலையில் 3 முறை முதல்வராக சாதனை படைத்தவர் ஜெயலலிதா, பெண்ணாக பெண்களுக்கான பல கோரிக்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா” என்று தெரிவித்துள்ளார்.

More News >>