இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன் ராகுல்காந்தி ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவர் மீது பல ஊர்களில் அவதூறு வழக்குகளை பா.ஜ.க.வினர் தொடுத்தனர்.
பெங்களூருவில் பத்திரிகையாளர் லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து, ராகுல் காந்தி குறிப்பிட்ட போது, ‘‘ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை கொள்கைகளை யாராவது விமர்சித்து பேசினால் அவர்கள் அடித்து உதைக்கப்படுவார்கள். கொலை கூட செய்யப்படுவார்கள்’’ என்று பேசினார். இதே போல், லங்கேஷ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் பேசினார். இவர்கள் இருவர் மீதும் மும்பை தலைமை குற்றவியில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பா.ஜ.க. பிரமுகர் துருதிமான் ஜோஷி இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இ.பி.ேகா. 499, 500 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்காக, ராகுல்காந்தி இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கே, மிலிந்த் தியோரா ஆகியோர் வந்தனர். ராகுல்காந்திக்கு முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் ஜாமீன் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதே போல் சீத்தாராம் யெச்சூரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் ராகுல் பேசுகையில், ‘‘நான் நீதிமன்றத்தில் எதுவும் பேசவில்லை. எனக்கு சம்மன் வந்ததால், ஆஜராகினேன். இது கொள்கைப் போராட்டம். நான் ஏழைகள், விவசாயிகள் பக்கமாக நிற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் போராடியதை விட இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்...’’ என்று ஆவேசமாக கூறினார்.
என்னை சஸ்பென்ட் செய்தது ராகுல் காந்திக்கு தெரியுமா?- கராத்தே தியாகராஜன் சரமாரி கேள்வி