வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டனர். பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்ற போது, மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் இல்லத்திலும், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இதில் கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர், கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இ்ந்நிலையில், அந்த தொகுதியில் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வரும் 11ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 18ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 19ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வரும் 22ம் தேதி மாலை வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இதையடுத்து, ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி