தினகரன் கட்சியில் கொ.ப.செ. ஆனார் சி.ஆர்.சரஸ்வதி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனினும், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 21 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இருந்த போதிலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறினர். தேர்தலில் தோற்ற தங்கத்தமிழ்ச் செல்வன், தி.மு.க.வுக்கும், இசக்கி சுப்பையா அதிமுக கட்சிக்கு தாவினர். அதே போல், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி, துணை பொதுச் செயலாளர்களாக பழனியப்பன், ரெங்கசாமி ஆகியோரும், பொருளாளராக வெற்றிவேலும், தலைமை நிலையச் செயலாளராக மனோகரனும், கொள்கைபரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘‘பதவியை காப்பாற்றவே ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பது தவறு. இதை எதிர்காலம் உணர்த்தும். நிர்வாகிகள் சிலர் வெளியேறியது சசிகலாவுக்கு தெரியும்’’ என்று தெரிவித்தார்.
48 நாள் அமைச்சர் என்று டிடிவி கிண்டல் செய்தார்... தாய் கழகத்திற்கே செல்கிறேன்..! இசக்கி சுப்பையா 'பளிச்'