திமுக இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என்று பல்வேறு அணிகள் இருந்தாலும், முக்கியமான அணியாக கருதப்படுவது இளைஞர் அணிதான். அதற்கு முதல் காரணம், கட்சியின் அசைக்க முடியாத தலைவராக கருணாநிதி இருந்த போது 1983-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணிக்கு அவரது மகன் மு.க.ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்டதுதான். அதே போல், தேர்தல் களத்தில் ஓடியாடி உழைப்பதும் இளைஞர்கள் என்பதால், இந்த அணிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. திமுக இளைஞர் அணிச் செயலாளராக 34 ஆண்டுகள் பணியாற்றிய மு.க.ஸ்டாலின், கடந்த 2017-ம் ஆண்டில் செயல் தலைவராக தேர்வானதும், இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்து விலகினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார். ஸ்டாலினுடைய மகனும் நடிகருமான உதயநிதிக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதற்காகவே அவர் விலகியதாக கூறப்பட்டது.அதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உதயநிதியை இளைஞர் அணிக் செயலாளராக நியமிக்க தலைமையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டத்தில் தொடங்கி கட்சியின் 40 மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமைக் கழகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன.

இதையடுத்து, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதியை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு மு.பெ.சாமிநாதன் அப் பொறுப்பில் இருந்து இன்று விடுவிக்கப்படுகிறார். திமுக சட்ட விதிகள் 18, 19-ன் படி உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு தற்போது 41 வயது ஆகிறது. சென்னையில் டான் போஸ்கோ பள்ளியில் படித்துவிட்டு, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றவர். 2009-ல் ஆதவன் படத்தில் நடித்த அவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், ரெட்ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை பகுதிநேர அரசியல்வாதியாக பணியாற்றி வந்த உதயநிதி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பேச்சாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது தந்தையின் வழியில் தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்கிறார்.

More News >>