சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கவில்லையே - மோடியை கிண்டல் செய்த ரேணுகா சவுத்ரி

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நீண்ட நேரம் உரையாற்றினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி சப்தம் போட்டு நீண்ட சிரிப்பை சிரித்தார். இதைப் பார்த்த ராஜ்யசபா சபாநாயகர் வெங்கய்யா நாயுடு குறுக்கிட்டார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறிக்கிட்டு, “அவரை தடுக்காதீர்கள். நன்றாக சிரிக்கட்டும். ரேணுகாவை எதுவும் சொல்லாதீர்கள். ராமாயணத்துக்கு பிறகு நீண்ட சிரிப்பை நாம் கேட்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது” என்றார்.

இதுகுறித்து கோவா மாநிலம் பனாஜியில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ரேணுகா சவுத்ரி, “சிரிப்பதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. எனவே, நான் சிரிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

என்னை விமர்சித்ததன் மூலம், பெண்கள் விஷயத்தில், பிரதமர் எப்படி குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளது. நான் இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் பழக்கமுள்ளவள்.

ஆனால் இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். மேல்சபையில் சிரித்ததற்காக அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு ஆளானேன். பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என எம்.பி.,க்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>