வாரிசு அரசியலை மிஞ்சிய தேவகவுடா குடும்ப அரசியல்
திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்ட அதே நாளில், கர்நாடகாவில் குமாரசாமி மகன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என்று ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும், இந்த வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூறி வருகிறார்கள். அதே சமயம், அவர்களின் பா.ஜ.க.விலேயே பல தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு எம்பி, எம்எல்ஏ என்று பதவிகளை பெற்றிருக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, பல மாநிலக் கட்சிகளிலும் தலைவர்கள் தங்களின் வாரிசுகளை இளம்வயதிலேயே பெரிய பதவிகளை கொடுத்து அழகு பார்க்கிறார்கள். வாரிசு அரசியல் பற்றி பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் கூட தங்கள் உறவினர்களை முக்கிய பதவிகளில் நியமித்திருக்கிறார்கள். தமிழகத்திலும் ஒரு காலத்தில், ‘‘நானே எனது குடும்பத்தினரோ பதவிக்கு வர மாட்டோம். அப்படி வந்தால் முச்சந்தியில் என்னை நிறுத்தி கேளுங்கள்’’ என்ற காரசாரமாக முழங்கிய பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கினார்.
தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி இளைஞரணி செயலாளராக ஜூலை 4ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் ராமதாசைப் போல், ‘‘எனது குடும்பத்தினரை எந்த விதத்திலும் கட்சிக்கு வரவிட மாட்டேன்’’ என்று சொன்னவர்தான்.
இந்நிலையில், கர்நாடகாவில் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளத்தில் அவரது குடும்பத்தினர் ஆதிக்கம் மற்ற எல்லா கட்சிகளையும் மிஞ்சியது. வாரிசு அரசியலையே மிஞ்சி விட்டது எனலாம். தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதலமைச்சர். மூத்த மகன் ரேவண்ணா, பொதுப்பணித் துறை அமைச்சர். குமாரசாமியின் மனைவி அனிதா, ராம்நகரா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி கிராம பஞ்சாயத்து தலைவர். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால், ஹசன் தொகுதி எம்.பி.யாகி உள்ளார். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் சுமலதாவிடம் தோற்றார்.
இப்போது அந்த நிகிலுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவியை தேவகவுடா அளித்திருக்கிறார். திமுகவில் உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு கொடுத்த அதே நாளில் அங்கு நிகிலுக்கும் பதவி அளித்துள்ளனர். இது குறித்து நிகில் கூறுகையில், ‘‘எனக்கு காலை 11 மணிக்கு போனில் கூப்பிட்டு இந்த பதவியை ஏற்குமாறு சொன்னார்கள், ஆச்சரியமாக இருந்தது’’ என்று கூறியிருக்கிறார். தனது இந்த பேரனால், எம்.பி.யாக முடியாவிட்டாலும் கட்சியில் ஒரு பதவியை கொடுத்து அழகு பார்க்கிறார் தேவகவுடா.
இந்த வாரிசு அரசியலுக்கு மக்கள் எப்போதுதான் முற்றுப்புள்ளி வைப்பார்களோ?
'ரொம்ப' குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்... 'அளவா' குடிங்க ஒன்றும் ஆகாது...! அமைச்சர் 'அட்வைஸ்'