கேட்சை கோட்டை விட்டு சூரியன் மீது பழிபோட்ட ஆப்கன் கேப்டன் - வீடியோ
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், எளிதான கேட்சை கோட்டை விட்ட ஆப்கன் கேப்டன் குல்பதின் நபி, அதற்குக் காரணம் சூரியன் தான் என்று சைகை காட்டிய சுவாரஸ்யம் நடந்தேறியது.
இங்கிலாந்தில் நடந்து வரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களுக்கும், சர்ச்சைகளுக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம். அரையிறுதியில் யார் ? யாருடன் மோதப் போகிறார்கள் என்பதும் கூட லீக் சுற்றின் கடைசிப் போட்டி வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இந்தத் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஒரே அணியாக ஆப்கன் அணி திகழ்கிறது .மே.இந்தியத் தீவுகளுடன் மோதிய கடைசிப் போட்டியில் ஆப்கன் அணியின் கேப்டன் குல்பதின் நபி, தனக்குக் கிடைத்த ஒரு அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டு, சூரியனை பழி போட்ட சுவாரஸ்யமும் நடந்தது.
இந்தப் போட்டியில் மே.இந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கில் அசத்தி 300 ரன்களுக்கு மேல் குவித்தது.போட்டியின் கடைசி ஓவரில் கடைசிப் பந்தை ஆப்கன் வீரர் ரஷித் கான் வீச, மே.இந்திய அதிரடி ஆட்டக்காரர் பிராத்வைத் அந்தப் பந்தை தூக்கி அடித்தார். மிக உயரத்தில் பறந்த பந்து, பவுண்டரி எல்லைக் கோடு அருகே நின்றிருந்த ஆப்கன் கேப்டன் குல்பதின் நபியின் கைகளுக்கு நேராக சென்றது. லட்டு போல கையில் வந்து விழுந்த அந்தப் பந்தை கேட்ச் பிடிக்க முயன்று நபி நழுவ விட்டு விட்டார்.
பந்தும் பவுண்டரியைத் தாண்டியும் சென்று விட்டது. கேட்சை கோட்டை விட்ட அடுத்த கணமே, பந்து வீசிய ரஷித்கானை நோக்கி, நான் என்ன செய்வேன்... சூரியன் தான் கண்ணை மறைத்து விட்டான்... என்று சூரியனைக் காட்டி சைகையில் கூறினார். இதனைக் கண்ட ரசிகர்களும் கிண்டலாக கூச்சலிட்டனர். இந்த வீடியோ காட்சியும் இப்போது வைரலாகியுள்ளது.
அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து ..? நியூசி.யுடன் பலப்பரீட்சை