ஓராண்டில் மதுவிற்பனை 31 ஆயிரம் கோடியாம் அரசுக்கு வெட்கம் இல்லை

தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது அதன் விற்பனையில் இருந்து தெரிகிறது. கடந்த ஓராண்டில் மது விற்பனை வரிகளுடன் சேர்த்து ரூ31,157 ேகாடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்தார். அதன்பின்பு, தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சிகளில் மது விற்பனையால் மட்டுமே கஜானாவை நிரப்பி ஆட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். கடைசியாக, கடந்த 2003ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது, சில்லரை மதுபான விற்பனையாளர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஏலத்தொகையை குறைவாக கேட்கிறார்கள் என்று கூறி, சில்லரை மது வியாபாரத்தையும் அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே எடுத்து கொண்டது. அத்துடன், பழைய மதுக்கடை உரிமையாளர்களுக்கு பார் லைசென்ஸ் கொடுத்து, டாஸ்மாக் கடைக்கு பக்கத்திலேயே பார்களை நடத்த அனுமதித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் எங்காவது ஒளிந்து நின்றுதான் குடிக்கும் நிலை இருந்தது. பார்களை திறந்து விட்டபின்பு, குடிப்பபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து விட்டது.

தற்போது தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அளித்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2018-19ம் ஆண்டில் மது விற்பனை, வாட் மற்றும் கலால்வரியுடன் சேர்த்து ரூ.31 ஆயிரத்து 157 கோடி என்று கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மூடியதால், 2017-18ம் ஆண்டில் மதுவிற்பனை ரூ.200 கோடி குறைந்தது. ஆனால், அதற்கு பின் ஊருக்குள் மதுக்கடைகளை கொஞ்சம், கொஞ்சமாக திறந்து தற்போது 31 ஆயிரம் கோடி விற்பனையை எட்டி மதுவிற்பனை சாதனை(?) படைத்துள்ளது தமிழக அரசு.

இப்போது 7 பீர் கம்பெனிகள் மற்றும் 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 356 ரகங்களில் மதுபானங்களை டாஸ்மாக் கொள்முதல் செய்து கடைகளில் விற்பனை செய்கிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதைப் பற்றியோ, ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா என்பது குறித்தோ அரசு அதிகாரிகள் கவலைப்படுகிறார்களோ, இல்லையோ! மதுவிற்பனையை மட்டும் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிக்கச் செய்து விடுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கும் தமிழகத்தின் ‘தள்ளாட்டம்’ அதிகரிப்பதில் வெட்கம் இல்லை. மாறாக, ‘‘கொஞ்சமா குடித்தால் உடம்புக்கு ஒன்றும் செய்யாது. அதிகமாக குடித்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி முழங்கியிருக்கிறார். என்னே தமிழகம்!

5-ந்தேதி திருமணம்.. சிறையில் நந்தினி...! விடுதலை கோரி வலுக்கும் குரல்
More News >>