தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி, வைகோ மீது இ.பி.கோ. 123ஏ(தேசத்துரோகம்) 153ஏ(பிரிவினையைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. வழக்கில் 8 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், 52 நாட்கள் கழித்து மே 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

பின்னர், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றமாக செயல்படும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வைகோவின் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று இன்று காலையில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தண்டனையை உடனே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து அப்பீல் செய்ய ஒரு மாதகால அவகாசம் தரப்பட்டுள்ளது. எனவே, அவர் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வைகோவுக்கு ஓராண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று கூறப்படுகிறது. எனினும், தேசத்துரோக வழக்கில் தண்டனை என்பதால், அது எப்படி கருதப்படும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வைகோ தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி
More News >>