பெட்ரோல், டீசலுக்கு புது வரி தங்கம் இறக்குமதி வரி உயர்வு
பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் புதிய வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
தனியார் மற்றும் அரசு பங்களிப்புகளுடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கும் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
நாடு முழுவதும் உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை அளிக்கப்படும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்த பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்தால் 180 நாட்கள் வரை கட்டாயக் காத்திருப்பு இல்லாமல் உடனடியாக ஆதார் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்படும்.
சாலை மற்றும் உள்கட்டமைப்பு சிறப்பு வரியாக பெட்ேரால் மற்றும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் விதிக்கப்படும்.
தங்கம் இறக்குமதி மீதான வரி 2.5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை