வேலூர் மக்களவைத் தேர்தல் எதிரொலி சட்டசபை கூட்டத்தொடர் 20-ந் தேதியுடன் முடிவடைகிறது
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைக்கு பொதுத் தேர்தல் கரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்தவுடன், பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த மாதம் 28-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஜூலை 30-ந்தேதி வரை 23 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில், வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இன்று சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 10 நாட்கள் முன்னதாகவே வரும் 20-ந் தேதியுடன் கூட்டத்தொடரை முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் வரும் 9-ந் தேதி முதல் சட்டசபை நடைபெறும் நாட்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டசபை நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.