ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வைகோ நாளை வேட்புமனு தாக்கல்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் நடைபெற்று வருகிறது. இந்த 6 இடங்களில் திமுகவும், அதிமுகவும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் தொழிற்சங்கத்தின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில், .இன்று வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வைகோ போட்டியிடுவதில் சிக்கல் எழுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாலும், அந்த தண்டனைக்கு எதிராக முறையீடு செய்ய ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், வைகோ தேர்தலில் போட்டியிட தடையில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனால் நாளை காலை 11 மணிக்கு தமிழக சட்டப்பேரவை செயலரிடம் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் நாளையே வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார்? என்பதை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே உறுதி கொடுத்த படி பாமகவுக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதிலும் அதிமுகவில் மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எம்.பி. சீட்டைப் பிடிக்க அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் பலரும் முட்டி மோதுவதாலும், வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.