விரைவாக மாற்றப்படும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
சாம்சங்கும் ஒன்பிளஸ்ஸும்
தற்போது ரூ.20,000/- விலையிலான பிரீமியம் ரக ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. பல்வேறு பெருநகரங்களில் வாழும் 800 பேரிடம் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் சாம்சங் பயனர் பத்துபேரில் ஆறுபேர் ஓராண்டுக்குள்ளும், ஒன்பிளஸ் பயனரில் பத்தில் நான்குபேர் ஓராண்டுக்குள்ளும் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவது தெரிய வந்துள்ளது.
ஈர்க்கும் அம்சங்கள்
விரல்ரேகை (ஃபிங்கர்பிரிண்ட்) மற்றும் முகமறி கடவுச்சொல் (ஃபேசியல் ரெகாக்னேசன்) வசதி, ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, இரட்டை அல்லது அதற்கு அதிகமான காமிராக்கள், நீண்டு நிற்கும் மின்தேக்கதிறன் (பேட்டரி), விரைந்து மின்னூட்டம் பெறும் திறன், அதிக சேமிப்பளவு போன்ற சிறப்பம்சங்களை பயனர்கள் விரும்புகின்றனர்.
உயரும் பணமதிப்பு
கணக்கெடுப்பில் பங்கு பெற்றோரில் பாதி எண்ணிக்கை பயனர்கள் அடுத்ததாக ரூ.40,000/- விலையிலும், பத்தில் ஐந்துபேர் ரூ.60,000/- விலையிலும், மொத்தத்தில் எட்டு விழுக்காட்டினர் ரூ.80,000/- வரையிலான விலையிலும் ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்கு தயாராக உள்ளனர்.
போட்டி நிறுவனங்கள்
இந்தியாவில் பிரீமியம் ரக ஸ்மார்ட்போன் விற்பனையில் வேகமெடுக்க ஆப்பிள் நிறுவனம் போராடி வருகிறது. சீன நிறுவனங்களான ஆப்போ, ஃபோவாய் மற்றும் விவோ ஆகியவையும் போட்டியில் உள்ளன.