உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்குமா இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்பது இன்று தெரிந்துவிடும்.
இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா(14), இந்தியா(13), இங்கிலாந்து (12), நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் இங்கிலாந்து, 4-வது இடம் நியூசிலாந்து என்பது முடிவாகிவிட்டது. முதல் மற்றும் இரண்டாவது இடம் யாருக்கு? என்பதில் ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இன்னும் இழுபறி உள்ளது. ஏனெனில் லீக் சுற்றின் கடைசிப் போட்டிகளில், இன்று இலங்கையுடன் இந்தியாவும், தெ.ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
பட்டியலில் முதலிடம் பிடிக்க இலங்கையை இந்தியா வெல்ல வேண்டும். தெ.ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும். இரு அணிகளுமே எதிரணிகளிடம் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ தற்போதைய நிலையே நீடிக்கும். தற்போதைய நிலையில் அரையிறுதியில் இங்கிலாந்துடன் இந்தியா மோதும்.ஒரு வேளை இந்தியா முதலிடம் பிடித்தால், 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்துடன் மோத வேண்டியிருக்கும்.
சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இம்முறை 23 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குள் போராடி நுழைந்துள்ளது. மேலும் தற்போதைக்கு பலம் வாய்ந்த அணியாகவும் இங்கிலாந்து உள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்வதே இறுதிப்போட்டிக்குச் செல்ல இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பது இன்றைய போட்டிகளின் முடிவில் தெரிந்துவிடும்.
அந்தோ பரிதாப நியூசிலாந்து..! இங்கிலாந்திடமும் படுதோல்வி - அரையிறுதி வாய்ப்பு எப்படி?