ஆவினில் முறைகேடுகளை தடுக்க முதல்வருக்கு முகவர்கள் வலியுறுத்தல்
ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு தடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டாலே நஷ்டத்தை தவிர்க்கலாம். அதன் மூலம், ஆவின் பால் விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை அதிகரித்து தரலாம் என்று பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை :
சட்டப்பேரவையில் 5ம் தேதியன்று பால் வளத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கான விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும், எதிர்க்கட்சிகளுக்கு சம்மதமா?’’ என திருப்பி கேட்டதுடன், விரைவில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், ஆவின் பால் விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்பதை முதல்வர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும் என்கிற முதல்வரின் தவறான கூற்றை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, பால்வளத்துறை சார்பில் முதல்வருக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
ஏனெனில், ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்கிய போது ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை என்பதையும், அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் மீண்டும் உயர்த்தி வழங்கிய போது "குருவி தலையில் பனங்காய்" வைத்த கதை போல ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி பொதுமக்களுக்கு கடுமையான சிரமத்தை அளித்ததையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமலேயே தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடலாம். எப்படியெனில் ஆவின் நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாதாந்திர அட்டை, மொத்த விநியோகஸ்தர், ரொக்க விற்பனை என மூன்று விதமான விலை நிர்ணயத்தால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 80கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதனை ரத்து செய்து ஒரே விலை நிர்ணயத்தை நடைமுறைபடுத்துவது, பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்புகளை வழங்குவது, அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு அறவே தடுப்பது, அதிக செலவினங்களை ஏற்படுத்தும் வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை செய்யும் நடைமுறையை (மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய்) தவிர்த்து ஆவின் பால் விற்பனையை தமிழகத்தில் அதிகப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயல்களை செய்வது போன்றவற்றை நடைமுறைபடுத்தினாலே ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டும்.
அப்படி ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டும் போது சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கின்ற வகையிலான ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் சேர்ந்ததும் சசிரேகாவுக்கு உடனடி பதவி