மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி விடிய விடிய நடந்த மீட்புப் பணி

மதுரை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது.

மதுரை அருகே செக்கானூரணியில் அரசுப்பள்ளி அருகே மாதவன் என்பவர் 3 மாடி கட்டிடம் கட்டி வருகிறார். 2 வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டாரி வேல்முருகன் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து பணி செய்து வந்தார்.

நேற்று மாலை கட்டுமானப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென 2-வது மாடியின் நடுப்பகுதி இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிடத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் ஆபத்து இருந்ததால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். நவீன மீட்பு எந்திரங்களும் கொண்டு வரப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்படுத்தினர். இதில் நேற்றிரவு 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போது காசிநாதன் என்பவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய பாலமுருகன், பாலு ஆகியோரை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கடைசியில் இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர்.

விடிய, விடிய நடந்த இந்த மீட்புப் பணியின் போது மாவட்ட ஆட்சியர், டிஐஜி, எஸ்.பி ஆகியோருடன் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அருகிலேயே இருந்து மீட்புப் பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். இந்த தீ விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரிசு அரசியலை மிஞ்சிய தேவகவுடா குடும்ப அரசியல்
More News >>