பா.ஜ.க.வுடன் தொடர்பு மம்தா திடீர் எச்சரிக்கை

பா.ஜ.க.வுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள நமது கட்சிக்காரர்கள் யாரென்று அடையாளம் காண வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் முடிந்த பின்பும் பா.ஜ.க. கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. திரிணாமுல் கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள், 60 கவுன்சிலர்கள் என்று வரிசையாக முக்கிய நிர்வாகிகளை பா.ஜ.க.வுக்கு இழுத்து வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியமான நபர்களை தொடர்ந்து பா.ஜ.க. இழுத்து வருகிறது.

இந்நிலையில், பங்குரா மற்றும் ஜார்கிராம் மாவட்ட நிர்வாகிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், ‘நமது கட்சியினர் யாரெல்லாம் பா.ஜ.க.வுடன் ரகசியத் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு கட்சியில் இருந்து நீக்க வேண்டும். யார் சென்றாலும் கவலையில்லை. 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். இது உறுதி’’என்று கூறியிருக்கிறார். இதை திரிணாமுல் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜார்கிராம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுகாமே சத்பதி கூறுகையில், ‘‘இந்த மாவட்டத்திலேயே பல திரிணாமுல் நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் விரைவில் பா.ஜ.க.வுக்கு வருவார்கள்’’ என்று தெரிவித்தார்.

மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சிக்கு காரணமே மம்தா தான் : காங்.குற்றச்சாட்டு
More News >>