மின்வாரிய தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு எதிரொலி: முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு

சென்னை: ஊதிய உயர்வை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் வரும் 16ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இதை கண்டித்து கடந்த மாதம் சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும், உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என அரசு உறுதியளித்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின் வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த மின் வாரியத் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்து இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>