வேலூர் மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.. அதிமுக கூட்டணியில் ஏ.சி.எஸ்

வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தரப்பில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பிடிபட்டதாகக் கூறி தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம் . வாக்காளர்களுக்கு பண விநியோகம் என்ற புகாரில் நாட்டிலேயே மக்களவைத் தேர்தல் முதன் முறையாக ரத்து செய்யப்பட்டது வேலூர் தொகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

அதே போன்று அதிமுக கூட்டணி சார்பிலும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமே மீண்டும் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வேலூர் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார்களில் சிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
More News >>