உலக கோப்பை கிரிக்கெட் : புள்ளிப் பட்டியலில் இந்தியா தான் டாப்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா சாதித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரு லீக் போட்டிகள் நடைபெற்றன. லீட்சில் நடைபெற்ற போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறி விட்ட இந்தியாவை, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி எதிர்கொண்டது. மான்செஸ்டரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட தெ.ஆப்பிரிக்காவுடன் மோதியது. நேற்றைய போட்டியில் இலங்கையை இந்தியா வென்று, தெ.ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்றால் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியில் அது தான் நடந்தேறியது.
இந்தியாவுக்கு எதிராக லீட்ஸில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியின் வீரர்கள் கருணாரத்னே (10) குஷால் பெர்னாண்டோ (18) ஆகியோர் பும்ராவின் வேகத்தில் விரைவில் அவுட்டாகினர். அவிஷ் பெர்னாண்டோ (20) பாண்ட்யாவின் வேகத்தில் வீழ, ஜடேஜாவின் சுழலில் குஷால் மென்டிஸ் (3) சிக்க, 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இலங்கை அணி தடுமாறியது. அதன் பின் ஏஞ்சலோ மாத்யூஸ், திரிமானே ஜோடி அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீட்டது. மாத்யூஸ் சதம் கடந்து 113 ரன்களும், திரிமானே (53) அரைசதம் எடுத்து அவுட்டாகினர். இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.இந்தியத் தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் பொறுப்புடன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோகித், தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்தார். சிக்சர், பவுண்டரி மழை பொழிந்த ரோகித் இந்தப் போட்டியிலும் சதம் (103) கடந்து, பல சாதனைகளின் மன்னன் என்ற புகழின் உச்சிக்கு சென்றார்.
தொடர்ந்து லோகேஷ் ராகுலும் (111) சதமடிக்க, 43.3ஒவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 9 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியது.
நேற்று தெ.ஆப்பிரிக்காவுடனான போட்டியில் தோற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.வரும் 9-ந் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. 11-ந் தேதி நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.