சாதனை மேல் சாதனை..! உலக கோப்பையில் நாயகனாக ஜொலிக்கும் ரோகித்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை தொடரில் சாதனை மேல் சாதனைகளாக படைத்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ரோகித், இந்த உலக கோப்பை தொடரில் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல் மிக நீளமாக நீள்கிறது.
ரோகித் படைத்துள்ள சாதனைப் பட்டியல் இதோ:
இலங்கைக்கு எதிராக நேற்று ரோகித் அடித்த சதம் உலக கோப்பையில் ரோகித அடிக்கும் 5-வது சதமாகும். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் 2015-ல் இலங்கையின் சங்ககரா 4 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அத்துடன் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக இங்கிலாந்து (102), வங்கதேசம் (104), இலங்கை (103) அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் சதம் விளாசியும் சாதனை படைத்தார்.
இந்த உலக கோப்பையில் இதுவரை 647 ரன்கள் குவித்துள்ள ரோகித் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன் 2003-ல் சச்சின் படைத்த சாதனையை முறியடிக்க இன்னும் 27 ரன்கள் தான் தேவை. அடுத்த இடங்களில் வங்கதேசத்தின் சாகிப் (606), ஆஸி.யின் வார்னர்(516) உள்ளை ர்.
உலக கோப்பை போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் (16) ஆறு சதம் அடித்த சாதனையையும் ரோகித் படைத்தார். இதற்கு முன் சச்சின் 44 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
அதே போன்று உலக கோப்பை போட்டிகளில் 15 இன்னிங்ஸ் ஆடி, அதிக பேட்டிங் சராசரி (69.78) வைத்துள்ளார் ரோகித் .அடுத்த இடத்தில் தெ.ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 22 போட்டிகளில் (63.52) உள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 27 சதமடித்துள்ள ரோகித், அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் தெ.ஆப்ரிக்காவின் ஆம்லாவுடன் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டார். சச்சின் (49), கோஹ்லி (41), பாண்டிங் (30), ஜெயசூர் யா(28) முதல் 4 இடங்களில் உள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 34 போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் 10 சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒரே ஆண்டில் இந்த சாதனை படைத்ததில்லை.
இது போல ரோகித்தின் சாதனைப் பட்டியல் இன்னும் நீள்கிறது. அடுத்து அரையிறுதிப் போட்டியிலும் ஜெயித்து இறுதிப் போட்டியிலும் இந்தியா விளையாடும் பட்சத்தில் ரோகித் இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்பது நிச்சயம்.