தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தியை திணிப்பதா? கனிமொழி எம்.பி. கண்டனம்
தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை திணிப்பதா? என்று கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,500 கோடி செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 4-ந்தேதி 500 புதிய பேருந்துகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பேருந்துகளில் அவசர வழி என்று குறிப்பிடும் பகுதியிலும், தீத்தடுப்பு எச்சரிக்கை வாசகங்களும் தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எந்த வகையிலாவது இந்தியை திணித்துவிடுவது என்று மத்திய அரசு கங்கணம் கட்டி செயல்படும் வேளையில், தமிழக அரசே பேருந்துகளில் இந்தியை நுழைத்துள்ளதற்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்,தமிழக மக்களின் வரிப் பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.