அரசுப் பேருந்தில் இந்தி... கவனக்குறைவால் நடந்த தவறாம்..! போக்குவரத்து துறை விளக்கம்
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளை, கடந்த 4-ந்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் சிலவற்றில் தமிழ் மொழியில் வாசகங்கள் இடம் பெறாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் மத்திய அரசுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல தமிழக அரசே இந்தியை திணிப்பதா என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
திமுக எம்.பி. கனிமொழியும், தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா? என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில், பெங்களூரு வழித்தடத்தில் செல்லும் சில பேருந்துகளில் மட்டுமே இந்தியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்தது. இது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. இதை உடனடியாக சரி செய்து, தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் இதே போன்றுதான் தென்னக ரயில்வேயிலும் ஒரு கூத்து நடந்தது. ரயில்வே நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தகவல் தொடர்பை பரிமாறும் போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியானது. இந்த சுற்றறிக்கை வெளியான மறுநாளே தமிழகத்தில் கொந்தளிப்பு எழ, தவறு நடந்து விட்டது எனக் கூறி, திடீரென சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது தென்னக ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது.