பரிதாப தோற்றத்தில் முகிலன்... இத்தனை நாள் எங்கிருந்தார்..! உண்மை வெளிவருமா

தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ??

ஒரு பைத்தியக்காரன் என நினைத்து திருப்பதியில் போலீசாரால் இழுத்துச் செல்லப்படுவதை ஏதேச்சையாக கவனித்த முகிலனின் நண்பர் ஒருவர் மூலம் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த சில மணி நேரங்களில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேற இப்போது சென்னையில் போலீசார் வசம் முகிலன் உள்ளார். இத்தனை நாட்கள் முகிலன் எங்கே இருந்தார்? அவரை சித்ரவதைக்கு ஆளாக்கி, கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல தனியொருவனாக அலையவிட்டது யார்? என்பது போன்ற பல சந்தேகங்களுக்குத்தான் இப்போது விடை தெரியாது அல்லாடுகின்றனர் முகிலன் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூகத்தின்பால் அக்கறை கொண்ட தமிழக மக்களும். இதற்கெல்லாம் முகிலன் வாயில் இருந்து பதில் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

முகிலன்... கடந்த பல ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாகட்டும் அல்லது ஸ்டைர்லைட் எதிர்ப்பு போராட்டம், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், மணற் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என பல போராட்டங்களில் முன்னின்று குரல் கொடுத்து வந்தவர். கடந்த பிப்ரவரி 15-ந் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முகிலன். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 'கொளுத்தியது யார்? - ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள்தான் காரணம் என பகிரங்கமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து அன்றிரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குச் சென்ற முகிலன் திடீரென மாயமானார்.

முகிலன் ஏற்கனவே செய்தியாளர்களைச் சந்தித்த போதே, `நான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு  ஆதாரங்களை வெளியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என சொல்லியிருந்தார். இதனால் முகிலன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனின் மனைவி ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

முகிலன் மாயமானதற்கு, ஸ்டெர்லைட் நிறுவனமோ, தமிழக போலீசோ தான் காரணம் என பலரும் குரல் எழுப்பினர். சமூக வலைதளங்களில் பலரும் `முகிலன் எங்கே?’ எனக் கேள்வியெழுப்ப, சூழலியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி தமிழகம் முழுக்க போராட்டங்களை நடத்தினர்.

முகிலன் வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் துப்புக் கிடைக்காமல் திணறினர்.சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘‘முகிலனை நெருங்கிவிட்டோம். கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது’’ என்பதை மட்டுமே சொல்லி வந்தனர்.100 நாட்கள் மேலாகியும் முகிலனைப் பற்றிய எந்தவித துப்பும் கிடைக்காததால், மணல் மாஃபியா கும்பலால் முகிலன் உயிருக்கு எதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் அலங்கோலமான தோற்றத்தில் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.  சனிக்கிழமை இரவு 7 மணியளவில் திருப்பதி ரயில் நிலையத்தில், முகிலனின் சொந்த ஊரான சென்னிமலையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் எதேச்சையாக இந்தக் காட்சிகளை கண்டு பதறிப் போயுள்ளார். இதனை செல்போனில் முகிலனின் மனைவிக்கும் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி முகிலன் போலீசாரால் இழுத்துச் செல்லப்படும் காட்சி, அவர் கூடங்குளத்திற்கு எதிராக முழக்கமிடுவது போன்ற வீடியோ பதிவும் விறுவிறுவென சமூக வலைதளங்களில் பரவ, அடுத்த சில மணி நேரங்களில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறி விட்டன.

ஆந்திர போலீசார் திருப்பதியில் இருந்து முகிலனை அழைத்துச் சென்று காட்பாடியில் தமிழக போலீஸ் வசம் ஒப்படைக்க, அங்கிருந்து முகிலனை அழைத்துக்கொண்டு கிளம்பிய தமிழக போலீஸார், அதிகாலையில் சென்னைக்கு வந்து விட்டனர்.

இப்போது முகிலன் எங்கே?’ என்ற கேள்விக்கு மட்டுமே 141 நாட்ளுக்குப் பிறகு விடை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த நாட்களில் முகிலன் எங்கே இருந்தார், அவரை யாராவது கடத்தி வைத்திருந்தார்களா? சித்ரவதை செய்யப்பட்டு பைத்தியக்காரன் போல் ஆக்கப்பட்டது ஏன்? திடீரென திருப்பதியில் அலங்கோலத் தோற்றத்தில் முகிலன் முளைத்தது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாமல் முகிலனின் ஆதரவாளர்களும், தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதற்கெல்லாம் விடை கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் முகிலனிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி முகிலன் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>