உலகளவில் பணக்கார நகரங்களில் பிரான்ஸை முந்தியது நமது மும்பை!

உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு நிறுவனமான ‘நியூவேர்ல்டு வெல்த்’ சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சான் பிரான்சிஸ்கோ (2.3 லட்சம் கோடி டாலர்), பெய்ஜிங் (2.2 லட்சம் கோடி டாலர்), ஷாங்காய் (2 லட்சம் கோடி டாலர்) முறையே 4, 5 மற்றும் 6-வது இடங்களில் இருக்கின்றன.

இந்நகரங்களுக்கு அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் (1.4 லட்சம் கோடிடாலர்), ஹாங்காங் (1.3 லட்சம் கோடிடாலர்), சிட்னி (1 லட்சம் கோடி டாலர்),சிங்கப்பூர் (1 லட்சம் கோடி டாலர்), சிகாகோ (98,800 கோடி டாலர்) ஆகிய நகரங்கள் உள்ளன.

மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலராகும். இதன்படி இந்நகரம் 12-வது இடத்தில் உள்ளது. அடுத்து டோராண்ட்டோ, 94,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 13-வது இடத்திலும், பிராங்க்பர்ட் 91,200 கோடி டாலருடன் 14-வது இடத்திலும் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்தில் உள்ளது.

More News >>