ராஜ்யசபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களுடன் அன்புமணியும் வேட்பு மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 18-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக தரப்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 3 பேரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சண்முகம், வில்சன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் வைகோவின் மனு பரிசீலனையின் போது தள்ளுபடி ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தரப்பில் இன்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்

வேட்பு மனுத்தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் 3 பேரும் சட்டசபை செயலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. நாளை வைகோவின் மனு ஏற்கப்படும் பட்சத்தில் என்.ஆர் இளங்கோ, தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.11-ந் தேதி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். 11-ந் தேதி மாலை இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இல்லாத பட்சத்தில் 6 பேரும் எம்.பி.க்களாக தேர்வானதாக அன்றே அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யோகம் யாருக்கு? கடைசி நேர முட்டல் மோதல்
More News >>