வேலைக்கு வராத மந்திரிக்கு எதுக்கு சம்பளம் தரணும்? கவர்னரிடம் பா.ஜ.க. புகார்
பஞ்சாபில் ஒரு மாதமாக அலுவலகத்திற்்கு வராத காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு எதுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது.
பஞ்சாப்பில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அவரது அமைச்சரவையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து இடம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புறங்களில் அதிக இடங்களில் ஆளும் காங்கிரஸ் தோற்றதால், சித்து சரியாக செயல்படவில்லை என்று கூறி, அவரிடமிருந்த உள்ளாட்சித் துறையை முதலமைச்சர் அமரீந்தர்சிங் பறித்தார்.
இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு என்னை மட்டுமே குற்றம் சொல்வதா என்று சித்து, முதல்வருக்கு எதிராக குரல் கொடுத்தார். இதன்பின்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் அமைச்சராக நீடித்தாலும் அலுவலகத்திற்கு கூட வராமல் ஒதுங்கியே இருக்கிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசியச் செயலாளர் தருண் சுக், மாநில கவர்னர் வி.பி.சிங் பட்னோருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில், ‘‘அமைச்சர் சித்து ஒரு மாதத்திற்கு மேலாக அலுவலகத்திற்கு வரவே இல்லை. சம்பளம் மற்றும் இதர சலுகைகளை அவர் அனுபவித்து கொள்கிறார்.
ஆனால், அவர் வராததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. தற்போது அவருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் காரணமாக பஞ்சாப்பில் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.