சரவணபவன் ராஜகோபால் உடனே சரணடைய உத்தரவு சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்(71), ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு பெண்ணின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். ஜீவஜோதியை திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாயிடம் கேட்டார். ஆனால், ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இருந்த போதிலும் ராஜகோபாலுக்கு ஆசை விடவில்லை.
இதன்பின், பிரின்ஸ் சாந்குமார் திடீரென காணாமல் போனார். ஜீவஜோதி மீதுள்ள ஆசையால், கூலிப்படை வைத்து பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ததாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2004ம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜூலை 7ம் தேதிக்குள் அவரும், மற்ற குற்றவாளிகளும் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ராஜகோபாலை தவிர 9 பேர் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராஜகோபால் மட்டும் சரணடையவில்லை. தனக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால், தன்னால் உடனே சரணடைய முடியவில்லை என்றும் சரணடைய மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.வி.ரமணா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலின் வழக்கறிஞர் ஆஜராகி, அவர் சரணடைய கால அவகாசம் தரக் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா?’’ என்று கேட்டார். மேலும், ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதற்கான மருத்துவ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டு மனுவை நிராகரித்தார். ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டுமென்று நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.