கட்சிக்கு திரும்புங்கள் இல்லையேல்..? காங்.அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சித்தராமய்யா எச்சரிக்கை

கர்நாடகாவில் ராஜினாமா செய்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனடியாக கட்சிக்கு திரும்ப வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இல்லையென்றால்அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு நடவடிக்கை பாயும் எனவும் சித்தராமய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக அரசியலில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக நடந்து வரும் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் கடந்த சில நாட்களாக உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. இதனால் ஆட்சியை தக்க வைக்க இரு கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டன. அதிருப்தி எம்எல்ஏக்கள் பலருக்கும் அமைச்சர் பதவி வழங்கி சமாதானப்படுத்தவும் முடிவு செய்தனர்.

இதற்கு ஏதுவாக,திடீரென நேற்று முதல்வர் குமாரசாமியைத் தவிர்த்து இரு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தனர். ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் பின்னணியில் பாஜகவின் கைங்கர்யம் உள்ளது என்றே கூறப்படுகிறது. மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை வேறு ரகசிய இடத்திற்கு அவசரமாக இடம் மாற்றினர். தற்போது அவர்கள் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து புனேவுக்கு கொண்டு செல்லவுள்ளார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால்,14 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மொத்தம் 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்தனர். அதிருப்தியாளர்கள் தவிர்த்து மற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை கடிதம் மூலம் தெரிவித்து விட்டனர்.

எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்தவுடன் சித்தராமய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில்தான் காங்கிரஸ்-மதச் சார்பற்ற கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் அமைந்து,கடந்த ஓராண்டு காலமாக ஆட்சியில் நீடித்து வருகிறோம். ஆனால் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில், தற்போது 6-வது முறையாக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது.

கட்சி முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரும் உடனடியாக கட்சிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு 14 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்களை சரிக்கட்ட கடைசி ஆயுதமாக தகுதிநீக்கம் என்ற எச்சரிக்கையை காங்கிரஸ் விடுத்துள்ளது. இதனாலேயே சபாநாயகர் ரமேஷ்குமாரும், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் எதுவும் தமக்கு வரவில்லை என தடாலடியாக அறிவித்திருந்தார். எம்எல்ஏக்கள் தன்னிடம் நேரில் வந்து ராஜினாமா கடிதம் கொடுத்தால் மட்டுமே பரிசீலிப்பேன் எனக் கூறி, இந்த விவகாரத்தில் காலம் கடத்த வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்துக் கொண்டே செல்கிறது.

More News >>