உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி.. இந்திய பந்து வீச்சில் நியூசி.திணறல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து திணறி வருகிறது.

உலக கோப்பை லீக் சுற்று ஆட்டங்களில் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி, பட்டியலில் முதலிடம் பிடித்து கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டது.லீக் சுற்றில் 7 போட்டியில் வென்று, இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியை தழுவியது.லீக் சுற்றில் நியூசிலாந்து அணியுடனான போட்டி மழையால் ரத்து ஆன நிலையில், இன்று அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்களின் ஆரம்பத்தில், இலங்கை, வங்கதேசம், ஆப்கன், தெ.ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை வரிசையாக பந்தாடிய நியூசிலாந்து, கடைசி 3 போட்டிகளில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளிடம் தோல்விச் சந்தித்த சோகத்தில் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் தட்டுத் தடுமாறித்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்யை நியூசி.பெற முடிந்தது. இந்த தோல்விகளால் மனதளவில் நியூசி. வீரர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து தனது திறமையை நிரூபிக்குமா? என்ற கேள்விக்குறியுடன் இன்று மான்செஸ்டரில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.

பேட்டிங்குக்கு சாதகமான மான்செஸ்டர் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசி.தொடக்க ஆட்டக்காரர்கள் தட்டுத் தடுமாறினர். முதல் ரன்னையே ஆட்டத்தின் 17-வது பந்தில் தான் எடுக்க முடிந்தது.10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து திணறல் ஆட்டம் ஆடி வருகிறது.

More News >>