ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகள் வழங்கப்படும்: எடப்பாடி அறிவிப்பு
தமிழகத்தில் ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகளும், ஒரு கிடாவும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இடம் பெற்றவை வருமாறு:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களுக்கு 90 சதவீதம் மானிய உதவியில் தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கிடா வீதம் வழங்கும். இத்திட்டத்தில், ஆடுகளை கொள்முதல் செய்தல், போக்குவரத்து செலவு, ஆடுகளுக்கு காப்பீடு செய்தல் ஆகியவற்றுடன், உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்துகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம், 6 ஆண்டுகள் வளர்த்த பிறகு நன்கு வளர்ந்த செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பதன் மூலம் ஒரு பயனாளி, முறையே ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1.8 லட்சம் முதல் ரூ.2.7 லட்சம் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சிக்கு 45 பெண்கள் வீதம் 81 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,645 பேர் நேரடியாக பயன்அடைவார்கள். இத்திட்டம், நடப்பாண்டில் ரூ.24.06 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
அமமுகவை கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் .. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்