கடத்தப் போறாங்க... பாதுகாப்பு கொடுங்க..- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அலறல்.! டி.கே.சிவக்குமார் தடுத்து நிறுத்தம்
முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 14 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த அதிருப்தியாளர்கள் தனி விமானத்தில் மும்பைக்கு பறந்தனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் பத்திரமாக தஞ்சமடைந்துள்ளனர். குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்க, பாஜக தான் சதி செய்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களையும் மும்பைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கும் ஏற்பாடுகளை எல்லாம் பாஜக தான் செய்து வருவதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை, அமைச்சர் பதவி ஆசை காட்டி சமாதானம் செய்ய காங். மற்றும் மஜத தலைவர்கள் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இப்படி அமைச்சர் பதவி தருவதாக கிரீன் சிக்னல் காட்டியும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மசியவில்லை. மாறாக தாங்கள் மும்பை பாந்த்ரா பகுதியில் தங்கியிருந்த சோபிடால் நட்சத்திர ஹோட்டலில் இருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தங்க ஆரம்பித்தனர். இப்போது மும்பையின் போவாய் பகுதியில் ரெனாய்ஸன்ஸ் என்ற சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியில் 'டிரபுள் சூட்டர்' என்று கூறப்படும் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இன்று மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், மஜத தலைவர்களில் ஒருவரான சிவலிங்க கவுடா ஆகியோர் மட்டுமே மும்பை சென்றனர்.
டி.கே.சிவக்குமார் மும்பை வந்துள்ள தகவல் அறிந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பீதியடைந்துள்ளனர். எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்வதில் சகலகலா கில்லாடியான சிவக்குமார், தங்களை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று விடுவார் என்ற பீதியில், பாதுகாப்பு கேட்டு மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவக்குமாரையோ, வேறு யாரையுமோ நாங்கள் சந்திக்க விரும்பவில்லை. அவரை ஹோட்டலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள் என்று கடிதத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வேண்டுகோள் விட, அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் எங்கள் சகாக்கள் தான். அவர்களை சந்தித்துப் பேசப் போகிறேன் என்று கூறி, மஜத தலைவர் சிவலிங்க கவுடா டி.கே.சிவக்குமார் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றார். ஆனால் ஹோட்டல் வாசலிலேயே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டனர். தானும் ஹோட்டலில் ரூம் புக் செய்துள்ளதாகவும், அங்கு தங்கியுள்ள நண்பர்களுடன் ஆலோசனை நடத்த வந்துள்ளதாகவும், யாரையும் கடத்திச் செல்ல வரவில்லை என்று கூறி சிவக்குமார் போலீசாருடன் வாக்குவாதம் செய்தும் அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களும் அங்கு குவிந்து சிவக்குமாரை உள்ளே விடக் கோரி கோஷம் எழுப்ப, அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் சிலரோ, சிவக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்ப எழுப்பினர் .இதனால் ஹோட்டல் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை'- கர்நாடக சபாநாயகர் கை விரிப்பு