டிக்டாக் கணக்கு முடக்கப்படாமல் பயன்படுத்துவது எப்படி?
நெறிமுறைகளை மீறிய பயனர்களின் கணக்குகளை டிக்டாக் சமூக ஊடக தளம் முடக்கியுள்ளது. டிக்டாக் நிறுவனத்தால் முடக்கப்பட்ட பயனர், தம் கணக்கினுள் நுழையவோ, பதிவேற்றம் செய்யவோ, ஏனைய பதிவுகளோடு தொடர்பு கொள்ளவோ இயலாது.
டிக்டாக் என்னும் வீடியோ பகிர்தளம் இந்தியாவில் குறுகிய காலத்திற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அதுபோன்ற தடைகளை வேறு சில சந்தைகளிலும் டிக்டாக் எதிர்கொள்ள நேர்ந்தது. தற்போது இந்தியாவில் இடைக்கால தடை விலக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ளடக்கத்திற்கான (content) குழுவை மாற்றியமைத்துள்ளதோடு, சில பாதுகாப்பு சிறப்பம்சங்களையும் டிக்டாக் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.இதுபோன்ற தடை செய்யப்படாமல் டிக்டாக் கணக்கினை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
கிண்டல், வெறுப்பு மற்றும் துன்புறுத்தும் உள்ளடக்கம்: எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவினரை இனம், பாரம்பரியம், மதம், தேசிய இனம், பண்பாடு, மாற்றுத்திறன், பாலியல் தேர்வு, பாலினம், பாலின அடையாளம், வயது உள்ளிட்ட ஏதாவது ஒரு விதத்தில் துன்புறுத்தக்கூடிய பதிவுகளையிடுவோர் வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் தடை செய்யப்படுவர்.
நிர்வாணம் உள்ளிட்ட தீங்குவிளைவிக்கும் படங்கள்: டிக்டாக்கின் பயனர்கள், உலக அளவிலான டிக்டாக் சமுதாயத்தின் உறுப்பினராக இருப்பதினால், ஏனைய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்திடும் வண்ணம் தூண்டக்கூடிய காரியங்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. அதுபோன்ற கிராபிக், பாலியல் மற்றும் அதிர்ச்சியூட்டக்கூடிய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பாதிப்பு: குழந்தைகளை பாலியல் நோக்கில் குறைவைக்கும் அல்லது எவ்வகையிலாகிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருளடங்கிய பதிவுகளை செய்வோர் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஆள்மாறாட்டம் மற்றும் அறிவுசார்சொத்துரிமை மீறல்: தவறாக வழிநடத்தும் அல்லது வர்த்தக குறியீடு, காப்புரிமை உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறக்கூடிய மற்றும் ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய பதிவுகளை டிக்டாக்கில் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும் பயனரின் கணக்கு முடக்கப்படும்.
உரிய விதத்தில் கவனமாக பதிவுகளை செய்தால் எந்த பிரச்னையும் எழாது.