சிறையிலிருந்து விடுதலையான வழக்கறிஞர் நந்தினிக்கு கல்யாணம்
மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியான நிலையில், இன்று அவருடைய நண்பர் குணாவை திருமணம் செய்து கொண்டார்.
மாணவப் பருவத்தில் இருந்தே சமூக அக்கறை கொண்டிருந்தவர் மதுரை நந்தினி. சட்டக் கல்லூரியில் படிக்கும் போது தனது தந்தை ஆனந்த் துணையுடன் மதுவிலக்கு கோரி, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தன்னந்தனி ஆளாக போராடியவர்தான் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. தான் நடத்திய பல்வேறு போராட்டம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றார் நந்தினி. இதனால் சட்டக் கல்லுரி மாணவி நந்தினி என்ற பெயர் தமிழகம் முழுவதும் பிரபலமானது.
நந்தினி இப்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆகிவிட்டார். ஆனாலும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வில்லை. இந்நிலையில் நந்தினிக்கும் அவருடைய குடும்ப நண்பர் குணா என்பவருக்கும் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப் பட்டிருந்தது. ஆனால் போராளிகளின் வாழ்க்கைதான் நிம்மதியாக இருக்காது என்பதற்கு நந்தினியின் வாழ்க்கையிலும் உண்மையாகிவிட்டது.
கடந்த 2014-ல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த மது எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 25-ந் தேதி திருப்பத்தூர் கோர்ட்டுக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம், அரசாங்கமே டாஸ்மாக் கடையில் மது விற்பது குறித்து கேள்வி எழுப்பினார் நந்தினி. டாஸ்மாக் சரக்கு உணவுப் பொருளா? போதைப் பொருளா? என்று நீதிபதியிடம் கேள்வி எழுப்பியதற்காக நந்தினி மற்றும் அவரது தந்தை மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குப் பாய்ந்து, 2 பேரும் மதுரை மத்திய, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நந்தினியின் திருமணம் திட்டமிட்டபடி கடந்த 5-ந் தேதி நடைபெறாமல் தடைபட்டது.
தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்ற நிலையில், அதற்கு நந்தினி சம்மதிக்கவில்லை. தைரியமாக சிறைக்கு சென்ற நந்தினி, இன்னொரு தேதியில் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நந்தினி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். நந்தினிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட அது தமிழக அளவில் டிரென்ட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 14 நாள் காவல் முடிந்து நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இதன்னால் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான கையோடு நந்தினி தனது நண்பர் குணாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரை அருகே உள்ள தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினி குடும்பத்தின் குலதெய்வ கோவிலில் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு நந்தினி கூறுகையில்,எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம். ஏற்கனவே எங்களது திருமணத்தை நிறுத்திய இந்த அரசு மேலும் ஏதாவது தொல்லை கொடுக்கும். எல்லாவற்றையும் இனிமேல் மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் என் கணவரோடு சேர்ந்து எங்கள் குடும்பமே அதை துணிவோடு எதிர்த்து போராடும். எங்களைப் போல் மேலும் பலர் உண்மைக்கு குரல் கொடுக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுவுக்கு எதிராக எங்கள் குடும்பமே இனி மிக தீவிரமாக போராடும் என்றார் நந்தினி.