உயர் இரத்த அழுத்த பாதிப்பு: தடுக்க இயலுமா?

"அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்," என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம்.

இரத்த அழுத்த மாறுபாடு

இதயத்திலிருந்து உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் அடங்கிய இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தமாக கணக்கிடப்படுகிறது.

120 / 80 mmHg அழுத்தம் இயல்பு என்றும் 120-129 / 80 mmHg அழுத்தம் மிதமான உயர்வு என்றும் 130-139 /80-89 mmHg அழுத்தம் உயர் இரத்தத்தின் முதல் நிலை என்றும் 140 / 90 mmHg அழுத்தம், உயர் இரத்த அழுத்தத்தின் இரண்டாம் நிலை என்றும் கருதப்படுகிறது.

அறிகுறிகள்

பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆகவே, இதை 'பேசாத கொலைகாரன்' என்ற பொருளில் Silent Killer என்று அழைக்கின்றனர். மூக்கில் இரத்தம் வெளியேறுதல், தலைவலி, மூச்சுவிட இயலாமை, தலைசுற்றல், வாந்தி, இலேசான மயக்கம், கண் பார்வை மங்குதல் அல்லது இரட்டையாக தெரிதல், இதய படபடப்பு ஆகிய அறிகுறிகளும் இருக்கக்கூடும்.

மருத்துவர் உங்கள் இரத்த அழுத்தத்தை பல முறை பரிசோதித்தே முடிவு செய்வார். மனம் ஏதாவது அழுத்தத்தில் இருந்தால் இரத்த அழுத்தம் உயரக்கூடும். நிலைமை சரியானதும் அதுவும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். ஆகவே, ஒன்றுக்கு பலமுறை சோதித்தே உயர் இரத்த அழுத்தம் என்ற முடிவுக்கு மருத்துவர் வருவார்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு வேறு ஏதாவது உடல்நல பிரச்னைகள் காரணமா என்று அறிந்து கொள்வதற்காக சிறுநீர், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட இரத்த பரிசோதனைகள், இசிஜி, சிறுநீரகம் அல்லது இதய ஸ்கேன் சோதனைகளை செய்யும்படி மருத்துவர் பரிந்துரைக்கக்கூடும்.

விளைவுகள்

உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள், மூளை செயல்பாட்டில் பிரச்னை மற்றும் ஞாபக சக்தியில் பிரச்னை, கண்ணிலுள்ள இரத்த நாளங்கள் தடித்தல், குறுகுதல் அல்லது கிழிந்து போதல், இரத்தம் உறைதல், சிறுநீரக நோய், வளர்சிதை குறைவாடு, மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வரக்கூடும்.

தடுக்கும் முறைகள்

ஆரோக்கியமான உணவு பழக்கத்தினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பை தடுக்கலாம். உணவில் உப்பு அல்லது சோடியத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும். அதிகமான சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட யோகர்ட், செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை மற்றும் பருமன் ஆகியவையும் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகலாம். எடை மற்றும் பருமனை குறைக்கவேண்டும். மது மற்றும் காஃபைன் அடங்கிய பானங்களை அதிகமாக அருந்துவதை தவிர்க்கவும்.

கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள்
More News >>