வைகோ ஆன்டி நேஷனல் சசிகலா புஷ்பா திடீர் ஆவேசம்
தேசத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் பேசும் வைகோவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று ராஜ்யசபா தலைவரான வெங்கய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் திடீரென உச்சாணிக் கொம்புகளுக்கு வந்தவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் மகளிரணி தலைவி, தூத்துக்குடி மேயர், ராஜ்யசபா எம்.பி. என்று ஜெயலலிதா இருக்கும் போது மிக வேகமாக வளர்ந்தவர் சசிகலா புஷ்பா. கடந்த 2016ம் ஆண்டில் அவருக்கும், திமுகவைச் சேர்ந்த எம்.பி. திருச்சி சிவாவுக்கும் இடையே டெல்லி விமானநிலையத்தில் மோதல் ஏற்பட்டது. அதற்கு முன்பு, அவர்கள் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சசிகலா புஷ்பா திடீரென ஒரு நாள் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசினார். தன்ைன ராஜினாமா செய்ய ஜெயலலிதா கட்டாயப்படுத்துவதாகவும், தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அதிமுக எம்.பியாக நீடித்த அவர், பல பிரச்னைகளை சந்தித்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக கொஞ்ச நாள் வலம் வந்தார். கடைசியில் அமைதியாக ஒதுங்கியிருந்தார்.
தற்போது திடீரென அவர் வைகோவுக்கு எதிராக ராஜ்யசபா தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘‘தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது. எனினும், 2 ஆண்டுகள் தண்டனை பெறவில்லை என்பதற்காக ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2 ஆண்டு தண்டனை பெற்றவர்களைத்்தான், தகுதியிழப்பு செய்ய முடியும். ஆனாலும் கூட, தேசத்துரோக தண்டனை பெற்றவர்கள், ஜனநாயகக் கோவிலான நாடாளுமன்றத்திற்குள் வருவது நல்ல நடைமுறையாக இருக்காது. எனவே, அவர் எம்.பி. பதவியேற்க அனுமதிக்கக் கூடாது.
வைகோவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபின்பும் அவர் தான் தொடர்ந்து அப்படித்தான் செய்வேன் என்று பகிரங்கமாக கூறி வருகிறார். அதேபோல், தேசவிரோதமாகவும், பிரதமருக்கு எதிராகவும் பேசுகிறார். தமிழக மக்களிடையே பிரதமருக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறி வருகிறார். தேசவிரோதமாக(ஆன்டி நேஷனல்) செயல்படும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து, அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘‘சசிகலாபுஷ்பாவுக்கு அடுத்த ஆண்டு எம்பி பதவிக்காலம் முடிகிறது. இனி அதிமுகவில் மட்டுமின்றி வேறு கட்சிகளிலும் சேர்ந்து அரசியல் செய்வதற்கு சசிகலா புஷ்பாவுக்கு வாய்ப்பில்லை. அதனால் அவர் பா.ஜ.க. பக்கமாக போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். அதனால், வைகோவை சீண்டி பா.ஜ.க.வில் ஆழம் பார்க்கிறார்’’ என்றார்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா? மு.க.ஸ்டாலின் காட்டம்