உலக கோப்பை அரையிறுதி ஆஸி. 223 ரன்னுக்கு ஆல்அவுட்..! இங்கிலாந்து அபாரம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸி. வீரர் ஸ்மித் மட்டுமே 85 ரன்கள் சேர்த்து அணியின் மானத்தை காப்பாற்றினார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
இன்று பர்மிங்காமில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தது இங்கிலாந்து .ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேறினார். வோக்ஸ் வேகத்தில் வார்னர் (9),ஹேன்ட் ஸ்கோம்ப் (4) வெளியேற, 14 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.
அதன் பின் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த கேரி, ஓரளவு தாக்குப் பிடித்து ஆட, இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்தது.கேரி 46 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அணியின் சரிவை ஓரளவு மீட்ட ஸ்மித் 85 ரன்களில் ரன் அவுட்டாக, ஆஸி.அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் அதில் ரஷீத், வோக்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி, சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைக்கும்.